இலங்கை மக்களுக்கு ஆபத்தாக மாறும் கடும் வெப்பம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பம் இன்றும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், கடும் வெயிலைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
இந்த நாட்களில், பல மாவட்டங்களில் வளிமண்டல வெப்பநிலை 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை உள்ள போதிலும் மனித உடல் அதிக வெப்பநிலையை உணரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பக் குறியீட்டின்படி, உடலால் உணரப்படும் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், மேலும் இது கவனம் செலுத்த வேண்டிய ஒரு நிலைமையாக கருதப்படுகிறது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடனான காலநிலையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.