கடைசி நேரத்தில் சஜித் தரப்பால் கைவிடப்பட்ட தமிதா அபேரத்ன!
சிங்கள சினிமாவின் பிரபல நடிகையான தமிதா அபேரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி வேட்பாளர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளார்.
அரகலய மக்கள் போராட்டக்களத்தில் பிரபலமான சிங்கள சினிமா நடிகை தமிதா அபேரத்ன, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலி்ல் இரத்தினபுரி மாவட்டத்தில் அவரைக் களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருந்தார். அதற்கான வேட்பு மனுவிலும் தமிதா அபேரத்ன கையொப்பமிட்டிருந்தார்.
முறைப்பாடு
இந்நிலையில், நேற்றிரவு இரண்டு மணியளவில் தமிதாவின் பெயர், வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, வேறொருவர் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
என்னதான் பிரபலமானவா்களாக இருந்தாலும், வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலுக்குள் உள்வாங்குவதில்லை என்று கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர் ஹேஷா விதானகே போர்க்கொடி தூக்கியதன் காரணமாகவே தமிதாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |