மின் வெட்டினால் வைத்தியசாலை கட்டமைப்பிற்கு பெரும் பாதிப்பு!
மின் வெட்டு காரணமாக வைத்தியசாலை கட்டமைப்புக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்த மின்வெட்டு நடவடிக்கைகளிலிருந்து வைத்திசாலைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
பிரதான வைத்தியசாலைகளில் மின்பிறப்பாக்கிகள் காணப்பட்டாலும் அவற்றுக்கு போதியளவு எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக மின்சாரத்தை பெற்றுக்கோள்வதில் தடைகள் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பினையும் பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தடுப்பூசிகள் உள்ளிட்ட தடுப்பூசிகள் குளிர்சாதன பெட்டிகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஒட்சிசன் விநியோகம், சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் பிரிவு மற்றும் கோவிட் சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்டனவற்றுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட வேண்டுமென சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
பிரதான வைத்தியசாலைகளில் மட்டுமே மின்பிறப்பாக்கிகள் காணப்படுவதாகவும் கோவிட் தடுப்பூசி போன்ற தடுப்பூசிகள் அனைத்து வைத்தியசாலைகளிலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.