சேதமடைந்த 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான மரக்கறிகள் : பெரும் ஏமாற்றத்தில் விவசாயிகள்
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான மரக்கறிகள் இன்று (21) மழையினால் கெட்டுப்போய் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் மரக்கறிகளை பாதுகாக்க கூரை இல்லாததே இதற்குக் காரணம் என சுனில் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மஹாவலி எச் பிராந்தியத்தில் இருந்து நொச்சியாகம, ராஜாங்கனை, விளச்சிய, மெதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து பெருமளவான விவசாயிகள் இன்று (21ஆம் திகதி) தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டு வந்தனர்.
வெளியான காரணம்
அந்த மரக்கறிகளை பாதுகாப்பாக வைக்க கூரை இல்லாத காரணத்தினால் வியாபாரிகள் மரக்கறிகளை வாங்குவதை தவிர்த்துள்ளனர்.
இதன்போது காலையில் இருந்து பெய்த மழையில் மரக்கறிகள் சேதமடைந்துள்ளதுடன், நுகர்வோர் மரக்கறிகளை வாங்குவதினை தவிர்த்துள்ளனர்.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில காலமாக மேற்கூரை அமைத்துத் தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் செய்து தரவில்லை எனவும், எனவே இவ்விடயம் தொடர்பில் பொறுப்பானவர்கள் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |