தொடரும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
புதிய இணைப்பு
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அம்பாறைக்கு கிழக்காக 82 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதுடன் இது இன்று இரவு அல்லது நாளை காலை புயலாக மாறும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ”இப்புயலுக்கு பெங்கால் (Fengal) என பெயரிடப்படும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது பெய்து வரும் கனமழை இன்னமும் அதிகரிக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மந்தமான வேகத்தில் நகர்வதால் இதன் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.
வெள்ள அனர்த்தத்திற்கான வாய்ப்புக்கள்
இன்றும் நாளையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்கும்.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தற்போது கிடைக்கும் மிக கன மழை தொடரும். திருகோணமலை , மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ,மன்னார் மாவட்டத்திற்கும் கனமழை தொடரும்.
நாளை இரவு முதல் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக மழை குறைவடையும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகள், குளங்களின் கீழுள்ள பகுதிகள், ஆற்று வடிநிலங்களுக்கு அண்மித்த பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உண்டு.
பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளதோடு, கன மழையும் கிடைத்து வருகின்றது.
ஆகவே வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதனைக் கருத்தில் கொள்ளுங்கள்.
காற்றின் வேகம் அதிகரிக்கும்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் வீசும் வேகமான காற்று தொடரும்.
சில வேளைகளில் இந்த காற்று மணித்தியாலத்துக்கு 80 கி.மீ. இனை விடவும் வேகமாக வீசக் கூடும்.
வடக்கு மாகாணத்தில் இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் மிக மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்.
இந்த புயலின் பாதிப்புக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்ககூடும் என்பதனால் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்களைச் சேர்ந்த 2476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 422 குடும்பங்களைச் சேர்ந்த 1554 பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனகபுரம், மாவடியம்மன்,தொண்டமான்நகர், கந்தபுரம், இராமநாதபுரம், திருநகர், கண்ணகிபுரம், ஜெயந்திநகர், திருவையாறு மேற்கு, கனகாம்பிகைக்குளம், உதயநகர் மேற்கு, அம்பாள்நகர், வட்டக்கச்சி, பொன்னகர், மலையாளபுரம், பெரிய பரந்தன் **பகுதிகளிலேயே இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |