சைக்கிள் வெள்ளி-நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய வேலைத்திட்டம்
வாராத்தில் ஒரு நாள் துவிச்சக்கர வண்டிகளில் சேவைக்கு வரும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
உலக நகர தினம் அனுஷ்டிக்கப்படும் எதிர்வரும் 31 ஆம் திகதி இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அன்றைய தினத்தில் இருந்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு துவிச்சக்கர வண்டிகளில் சேவைக்கு வருவதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
சைக்கிளில் வேலைக்கு செல்வோம்

“சைக்கிள் வெள்ளிக்கிழமை- சைக்கிளில் வேலைக்கு செல்வோம்” என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அடுத்த வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
துவிச்சக்கர வண்டிகளில் சேவைக்கு வருவதை ஊக்குவிப்பதற்காக துவிச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்கவும் நகர அபிவிருத்தி அதிகார சபை துவிச்சக்கர வண்டி ஓட்டிகள் ஒன்றியத்தில் அங்கத்துவதை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் நகர அபிவிருத்தி அமைச்சில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த தனியான இடத்தை ஒதுக்கவும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர வெள்ளிக்கிழமை நாட்களில் துவிச்சக்கர வண்டிகளில் சேவைக்கு வருவோர் இலகுவான உடைகளை அணிந்து சேவைக்கு வரவும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் பிரசாத் ரணவீர கூறியுள்ளார்.
வீதிகளில் சைக்கிள்களுக்கு தனியான வழித்தடம்

சுற்றாடலை பாதுகாப்பது, ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குதல், போக்குவரத்து நெரிசலை குறைப்பது என்பது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துவிச்சக்கர வண்டிகளில் வருவோருக்காக பேருந்து நிலையம், தொடருந்து நிலையம் ஆகிய இடங்களில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளன. அத்துடன் எதிர்காலத்தில் துவிச்சக்கர வண்டிகளுக்கு வீதியில் தனியான வழித்தடத்தை ஏற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளதாகவும் ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.