இலங்கை சுங்க திணைக்களத்திற்கும் திறைசேரிக்கும் இடையில் முரண்பாடு
இலங்கை சுங்க திணைக்களம் வெகுமதி நிதி தொடர்பாக திறைசேரியுடன் முரண்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வெகுமதி நிதி விடயத்தில் நிதியமைச்சின் செல்வாக்கையும் சுங்கப்பிரிவினர் எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் ஊழியர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியை திறைசேரிக்கு மாற்றுவதற்குப் பதிலாக தக்கவைக்கப்பட வேண்டும் என்று சுங்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது, வெகுமதிப் பணம் செலுத்துவதற்கு திறைசேரியின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வெகுமதிகளை வழங்கல்
மேலும், முன்னைய முறையின் கீழ் சுங்கத்தினால் முதலில் வருமானம் திறைசேரிக்கு அனுப்பப்பட்டு, வெகுமதிகளை செலுத்துவதற்கு, சுமார் இரண்டு ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலதாமதம் இன்றி வெகுமதிகளை வழங்குவதற்காக, வருமானத்தின் ஒரு பகுதியை சுங்கத்துறை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஒரு புதிய முறையின் கீழ் வருமானத்தை திறைசேரிக்கு மாற்ற வேண்டும் என திறைசேரி கோரியுள்ளது.
இந்நிலையில் வெகுமதிகளை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உடனடியாக அந்த பணம் செலுத்தப்படும் என்றும் திறைசேரி தெரிவித்துள்ளது.
100 மில்லியன் வைப்புத்தொகை
தற்போது 800 மில்லியனுக்கும் அதிகமான நிதித்தொகையை சுங்கம் தம்வசம் வைத்துள்ளது.
எனினும் குறித்த நிதியை வைத்திருப்பதற்கு பதிலாக திறைசேரிக்கு அதனை மாற்றுவதன் மூலம், வட்டியில் இருந்து அதிகப் பலன்களைப் பெறமுடியும் என திறைசேரி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வெகுமதிகளை செலுத்துவதற்கு சுங்கம் கோரினால், திறைசேரி சுமார் 100 மில்லியன் ரூபாய் வரையில் வைப்புத்தொகையை வைத்திருக்க தயாராக வைத்திருப்பதாகவும், ஏனைய நிதிகள் உடனடியாக கிடைக்கப்பெறும் எனவும் திறைசேரி தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை
இருப்பினும் சுங்க அதிகாரிகள் இதனை ஏற்றிருக்கவில்லை. அத்துடன் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் நிதியமைச்சில் இருந்து சுங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கும் சுங்க அதிகாரிகள் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளனர்.
இதற்கு மத்தியில் சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையை அடுத்து இரண்டு மூத்த அதிகாரிகள் நிதியமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், 15 அதிகாரிகளின் சேவையை மூன்றாண்டுகளுக்கு மட்டுப்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |