ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன்! 7 வருடங்களாக மறுக்கப்படும் கல்விக்கான வாய்ப்பு
கடந்த 2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் தனது தாயையும், தந்தையையும் இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பிய ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் வாய்ப்பு கடந்த 7 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதாக சிறுவனின் தாயின் சகோதரி தெரிவித்துள்ளார்.
“ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்” என்ற தலைப்பில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான கருத்தாடல் நிகழ்வு நேற்று (21.04.2026) மட்டக்களப்பு கல்லடி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த பெண் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் அந்த சிறுவனின் பெற்றோர் உயிரிழந்துள்ளதுடன், அவரது தங்கை இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ளார். தற்போது அவர்கள் இருவரையும் தாயின் சகோதரி ஒருவர் பராமரித்து வருவதாகவும் அந்த நிகழ்வில் கூறியுள்ளார்.
7 வருடங்களாக போராடும் சிறுவன்
இந்த விடயம் தொடர்பில் பெண் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“குறித்த சிறுவன் மட்டக்களப்பிலுள்ள ஆங்கில மொழி மூலம் கல்வி வழங்கும் சர்வதேச பாடசாலை ஒன்றில் 6 ஆம் தரம் வரை கல்வி கற்றிருந்தான். ஆனால், அந்த பாடசாலையில் 7 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்கான வசதிகள் இல்லாததால், அரசுப் பாடசாலையை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மட்டக்களப்பு நகரில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கும் வசதியுள்ள பாடசாலைகளில் அந்த சிறுவனை இணைக்கும் முயற்சிகள் கடந்த 7 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை அது சாத்தியமாகவில்லை. தற்போது 10 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் சிறுவன், தமக்கு பரிச்சயமில்லாத தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பாடசாலையில் மிகுந்த சிரமத்துடன் கல்வி கற்று வருகிறார்.
இதனால் அவர் பல சிரமங்களையும் கூடுதல் செலவுகளையும் எதிர்கொண்டு வருகிறார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் தனது தந்தை, தாயை இழந்ததுடன், தங்கையின் பார்வையையும் இழந்துள்ள தனது அக்காவின் மகனுக்கு மட்டக்களப்பு நகரில் உள்ள ஏதாவது ஒரு பாடசாலையில் ஆங்கில மொழி மூலம் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.