ரணிலை புறக்கணித்த மகிந்த, நாமல், ஜோன்ஸ்டன் - தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைச்சர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான கலந்துரையாடலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர்கள் தவிர்த்துள்ளனர்.
இந்த தீர்மானத்தால் பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பிற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களை ஜனாதிபதி அழைத்திருந்தார்.
அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடும் நோக்கில் இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் பலன்களை எவ்வாறு மக்களுக்கு கொண்டு சேர்ப்பது, தொலைத்தொடர்பு போன்ற நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு தற்போதுள்ள எதிர்ப்பிற்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், என்பது குறித்து விரிவாக கலந்துரையாடுவதே இந்த கலந்துரையாடலின் நோக்கம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாமல் ராஜபக்ஷ, ஜோன்சடன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சனத் நிஷாந்த, எஸ்.எம்.சந்திரசேன மற்றும் பொதுஜன பெரமுன தலைவர்கள் உட்பட மாவட்ட தலைவர்கள் எவரும் இந்த கலந்துரையாடலில் ஈடுபடவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை புறக்கணித்தமையே இந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கான பிரதான காரணம் என ஒரு தரப்பு தெரிவித்துள்ளது.



