ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தகவல்களை அலட்சியம் செய்த நல்லாட்சி அரசாங்கம் :வியாழேந்திரன் குற்றச்சாட்டு (Video)
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தகவல்களை நல்லாட்சி அரசாங்கம் அலட்சியம் செய்து செயற்பட்டது போன்று தற்போதைய அரசாங்கம் தகவல்களை அலட்சியம் செய்து செயற்படக்கூடாது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(26.08.2023) காணி உரிமம் அற்றவர்களுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது காலநிலை சீரமைவான நீர்பாசன விவசாய திட்டத்தின் கீழான பயனாளிகளுக்கு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
காணி உரிமப்பத்திரங்கள் வழங்கல்
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு பகுதியை
சேர்ந்த சுமார் 105 காணி உரிமம் அற்ற குடும்பங்களுக்கான காணி உரிமப்பத்திரங்கள்
வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலநிலை சீரமைவான நீர்பாசன விவசாய திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வகையிலான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,வறிய நிலையில் உள்ளவர்கள் தமது வீடுகளில் மலசலகூடங்களை அமைப்பதற்கான நிலஅளவை வரைபடங்கள் 50குடும்பங்களுக்கு இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளதோடு, உதவி பிரதேச செயலாளர் நிரூபா பிருந்தன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.











