கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச பண்பாட்டு விழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச செயலகம், பிரதேச சபை, கலாசாரபேரவை ஆகியன இணைந்து 2024ஆம் ஆண்டுக்கான பிரதேச பண்பாட்டு விழாவினை நடத்தியுள்ளன.
இந்நிகழ்வானது, நேற்றைய தினம் (01) நடைபெற்றுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு கலைநிகழ்வுகளின் ஆற்றுகையுடன் முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்துக்கு அருகில் இருந்து கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கலந்து கொண்டோர்
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம் ஆகியோரும் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கலாமன்றங்களின் கலைஞர்களின் கலைநிகழ்வுகளோடு கலைப் பணியாற்றியவர்கள் இளம் கலைஞர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டதோடு கலைப்பணியாற்றிய மூத்த கலைஞர்கள் சிலருக்கு முல்லைப் பேரொளி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பண்பாண்டலுவல்கள் அலகு வடக்கு மாகாண திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி லாகினி நிருபராஜ், பிராத்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ச.ஜசிந்தன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மூத்த கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |