2024 ஐபில் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது சென்னை அணி
புதிய இணைப்பு
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிகொண்டுள்ளது.
கோலாகலமாக ஆரம்பமாகிய இந்த தொடரின் முதல் போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற பெங்களூரு அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
கோலியுடன் இன்னிங்ஸை ஆரம்பித்த அணித்தலைவர் பிளசிஸ், 23 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரஜத் பட்டிதார், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
விராட் கோலியும், கேமரூன் கிரீனும் சிறிய இணைப்பட்டதை அணிக்கு பெற்றுக்கொடுத்தனர்.
அதன் பின்னர் இணைந்த தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் இணைந்து 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். அனுஜ், 25 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்று இறுதிப்பந்தில் ஆட்டமிழந்தார்.
தினேஷ் கார்த்திக், 26 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெங்களூரு அணி பெற்றுக்கொண்டது.
174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 18.4 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்தது.
சென்னை அணி சார்பில் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை ஆரம்பித்தனர் ருதுராஜ், 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
15 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்று ரச்சின் வெளியேறினார். மேலும் ரஹானே 27, மிட்செல் 22 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், ஷிவம் துபே மற்றும் ஜடேஜா இணைந்து நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 66 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர்.
இரண்டாம் இணைப்பு
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை அணிக்கு வெற்றியிலக்காக 174 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறும் இன்றைய முதலாவது போட்டியில், சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் 4 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
மேலும் பெங்களூர் அணி சார்பில் அனுஜ் ராவத் அதிகபட்சமாக 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
Anuj Rawat came right out of syllabus for CSK ??
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 22, 2024
Struck at over 190 and at such a crucial stage. Keep your bat and your head high, Anuj ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #CSKvRCB pic.twitter.com/3vHUj10F7S
முதலாம் இணைப்பு
கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்கின்றன.
குறித்த போட்டியானது இன்றையதினம் (22.03.2024) சென்னை சிதம்பரத்தில் அமைந்துள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்
இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் முதல்முறையாக இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், நடிகர் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இருவரின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றிருந்ததுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |