வெளிநாடு சென்ற இலங்கை பெண்களின் பரிதாபம் - இருட்டு அறையில் நடக்கும் கொடுமைகள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண் என்ற போர்வையில் 30 பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை டுபாயில் அஜ்மலில் உள்ள ரகசிய வீட்டில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரமான சித்ரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் பின்னால் ஒரு கும்பல் இயங்குவதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சு, சுவிஸ் அபிவிருத்தி முகவர் இணைந்து நடத்தும் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான திட்டம் தொடர்பில் கம்பளையில் செய்தியாளர் மாநாடு ஒன்று நேற்று நடைபெற்றது. இதன்போது திட்டத்தின் முகாமையாளர் சரத். துல்வல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொடுமைப்படுத்தப்படும் பெண்கள்
நாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களை பல்வேறு இடங்களில் தடுத்து வைப்பதாகவும், அவர்களுக்கு முறையான உணவு, பானங்கள் கூட வழங்கப்படுவதில்லை எனவும் அவர்களின் சம்பள பணத்தையும் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுபாயில் உள்ள அஜ்மலில் உள்ள ரகசிய வீட்டில் 30 பெண்கள் தங்க வைக்கப்பட்டு, கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சரியாக உணவளிக்காமல், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் வேலைக்கு அனுப்பி அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காணொளிகளை அனுப்பி வைத்துள்ளனர்.
கொடுமைப்படுத்தும் கும்பல்
குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், குழந்தைகளின் பசியைப் போக்கவும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற போதும், கடத்தல்காரர்கள் தமது பணத்தை கொள்ளையடிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தைகள் பட்டினியால் வாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் அழுது புலம்புவது காணொளிகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த பெண்கள் இலங்கையில் சட்டப்பூர்வ அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களினால் வெளிநாட்டிற்கு சென்றுள்ள போதிலும், நியமிக்கப்பட்ட வேலைத் தளங்களுக்கு அவர்களை அனுப்பாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.