நீர் பற்றாக்குறையால் கருகும் பயிர்கள் - விவசாயிகள் விடுத்துள்ள அவசரக் கோரிக்கை
அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டுகஸ்துகிலிய ஈத்துள் வெட்டுனுவேவ பகுதியில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, விவசாய நிலங்கள் அனைத்தும் நீரின்றிக் காய்ந்து விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 400 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய சிறுபோகச் சாகுபடி காலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் கதிர் வந்த நிலையில், குளங்களில் போதுமான நீர் இல்லாததால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பயிர் கருகும் நிலை
இந்த நிலை தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
"நாங்கள் மிகவும் நம்பி இந்தச் சிறுபோக வேளாண்மையை மேற்கொண்டோம். தற்போது பயிர்கள் கதிர்விட்டு அறுவடைக்குத் தயாராகும் நிலையில் நீர் இல்லாமல் கருகி வருகின்றன. எமது பகுதிக்கு அருகில் சுமார் 9 குளங்கள் உள்ளன. அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட நிருவாகமும் அக்கறையெடுத்து அக்குளங்களில் இருந்து எமது விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரைத் திறந்துவிட்டிருந்தால், இன்று எங்களுக்கு இந்த அளவுக்குப் பாதிப்பும் நஷ்டமும் ஏற்பட்டிருக்காது" என்றார்கள்.

மாதக்கணக்கில் உழைத்து, கடன் வாங்கிச் செய்த விவசாயம் பயிர் அறுவடைக்காலத்தில் நீரின்றிக் கருகி வருவதைப் பார்த்து விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட விவசாய மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, அருகில் உள்ள குளங்களில் இருந்து நீரினைத் திறந்துவிட்டுப் பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening