போலியான பேயைக் காட்டிப் பீதியைத் கிளப்பும் எதிர்க்கட்சிகள்! பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன பதிலடி
அரசால் கொண்டுவரப்படவுள்ள 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' எந்தவொரு வகையிலும் அடக்குமுறைக்காகக் கொண்டுவரப்படவில்லை எனவும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவே எதிர்க்கட்சியினர் இது குறித்துப் போலியான அச்சத்தைப் பரப்பி வருகின்றனர் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் விசேட மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டை நெருக்கடிக்குள் உள்ளாக்கும் முயற்சி
ஊடகச் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன,
"நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறுகிய நோக்கங்களுக்காகத் தங்களது அரசியலை நகர்த்துவோர் எப்போதும் போலியான பேய்களைக் காட்டி நாட்டில் நெருக்கடிகளை உருவாக்கவே முயற்சிக்கின்றனர்.

தற்போது அவர்கள் 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' என்ற விடயத்தைக் கையில் எடுத்துப் பிரசாரம் செய்கின்றனர்.
தேசியவாதத்திலோ அல்லது ஏதேனும் ஒரு சட்டத்திலோ தொற்றிக்கொள்ளும் இவர்கள், அதற்கும் வழியில்லை என்றால் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்தாவது அரசாங்கத்தின் மக்கள் சேவைப் பயணத்தைப் பின்னோக்கி இழுக்க முயற்சிக்கின்றனர்.
22 ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோதும் எவ்வாறெல்லாம் பீதியைக் கிளப்பினார்கள்? ஆனால், இன்று அதைப் பற்றி எந்தச் சத்தமும் இல்லை. இப்போதும் அதேபோன்றதொரு நாடகத்தையே எதிர்க்கட்சிகள் அரங்கேற்றுகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.

அரசின் சர்வதேச அங்கீகாரங்கள் குறித்து மேலும் விளக்கமளித்த அவர்,
"நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊடகங்களை அடக்குவோம், பெரஹரா நடத்துவதை நிறுத்துவோம் எனப் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்வைத்தனர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச தரவரிசைகளின்படி இலங்கை ஊடகச் சுதந்திரத்தில் முன்பு இருந்ததை விடவும் சிறந்த நிலைக்கு முன்னேறியுள்ளது.
பாலின சமத்துவம், சமூக நீதி என சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து அளவுகோல்களிலும் எமது நாடு உயரிய இடத்தைப் பிடித்துள்ளது. பழைய அரசியல் முறையுடன் ஒப்பிடும்போது ஊடகங்கள் தொடர்பில் நாங்கள் எவ்வளவு ஜனநாயகமாகச் செயற்பட்டோம் என்பதை ஊடகவியலாளர்கள் நன்கு அறிவர்.
இதுவொரு மக்கள் ஆதரவு பெற்ற அரசாகும். எமது மக்கள் ஆணையின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்பதில் நாங்கள் எந்தவிதத்திலும் பின்வாங்கப் போவதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
மோசமடையும் ஷிரந்தியின் உடல்நிலை! பெரும் கவலையில் நாமல் மற்றும் குடும்பத்தினர்: பின்னணியில் தீவிர சட்ட ஆலோசனை
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri