வவுனியா ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இடமாற்றம் குறித்து விமர்சித்த எம்.பி
வவுனியா நகர் புறத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிகுளத்தில் நேற்று(26.12.2024) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“செட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. நகர்புற பாடசாலைகள் பலவற்றில் மேலதிகமாக பல ஆசிரியர்கள் உள்ளனர். ஏன் நகர்புறப் பகுதியில் உள்ள ஆசிரியர்களை பின்தங்கிய பிரதேசத்திற்கு அனுப்ப முடியாமல் உள்ளது.
கடுமையான நடவடிக்கைகள்
செட்டிகுளம் பிரதேசத்தில் கடமையாற்றும் சில ஆசிரியர்கள் 8 வருடம் முடிந்தும் இடமாற்றம் வழங்கப்படாது உள்ளனர். ஆனால், நகர்புறப் பாடசாலைகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் நகர்புற பாடசாலைகளுக்கே சுழற்சி முறையில் இடமாற்றமாகி செல்கின்றனர்.
ஏன் அந்த ஆசிரியர்களை தூரப் பிரதேசங்களுக்கு அனுப்பக் கூடாது. தொடர்ச்சியாக தூரப் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏன் விமோசனம் கொடுக்கக் கூடாது.
இங்கு கூடுதலான அதிகாரிகள் நகர் புறத்தில் இருக்கும் ஆசிரியர்களை காப்பாற்றி செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்களை வழங்குகின்றனர். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |