நகைச்சுவை நடிகர் பாணியில் செயற்படும் மாவையும் அவரது மகனும்! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அவருடைய மகன் கலை அமுதன் ஆகியோர் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் செயற்படுவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா குற்றச்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (17.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்காக சஜித்தின் பிரசார நடவடிக்கைகளை கண்காணிக்கும் தொழிலதிபர் லக்கி என்பவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்களை மாவை சேனாதிராஜாவின் மகன் கலை அமுதன் பெற்றதாக நம்பத் தகுந்த தகவல்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளது.
பணம் வாங்கியவர்களுக்கு புள்ளடி
நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம் திரைப்படம் ஒன்றில் வாக்குச் சீட்டை காட்டி பணம் வாங்கியவர்கள் எல்லோருக்கும் புள்ளடி போட்டதாக ஒருவர் கூறுவார். அவ்வாறே மாவை மற்றும் அவரது மகனின் செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.
சஜித்துக்கு ஆதரவு என தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக கூறும் தலைவர் மாவை, ரணில் விக்ரமசிங்க தனது வீட்டுக்கு வந்தபோது நீங்கள் தான் ஜனாதிபதியாக வேண்டும் என்கிறார்.
அதன் பின் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் கூட்டத்தில் சஜித்துக்கு ஆதரவு வழங்கியதில் மாற்றம் இல்லை எனக் கூறிவிட்டு வரும் வழியில் கிளிநொச்சியில் பொது வேட்பாளர் ஆதரவு மேடையில் ஏறினார்.
மகன் கலை அமுதன் யாழ்ப்பாணத்திற்கு வந்த ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், மறுநாள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்கிறார். இவற்றையெல்லாம் நோக்கும்போது பணம் வாங்கியவர்களிடம் எமது இனத்தை காட்டி கொடுக்கும் சந்தர்ப்பவாத அரசியலை தகப்பனும் மகனும் செய்கிறார்கள்.
கட்சியை சீரழிக்கும் செயற்பாடு
தந்தை செல்வாவால் கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட தமிழரசு கட்சி இன்று பணத்துக்காக பல கோணங்களில் பிரிந்து நிற்கிறது.
தந்தை செல்வாவின் மனைவி இந்த அரசியல் செயற்பாடுகள் உங்களுக்கு வேண்டாம் என மண்ணை அள்ளி அவர் மீது தூவியபோதும் அதனை தட்டிவிட்டு இனத்துக்காக என்னால் முடிந்தவரை போராடுவேன் என கூறிய பெருந்தலைவர் உருவாக்கிய கட்சி.
ஆகவே, தமிழரசு கட்சியை சீரழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் தமிழ் மக்களால்
விரைவில் துரத்தி அடிக்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |