அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்துள்ள உத்தரவாதம்
முதலாம் இணைப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் நேற்று முன்தினம் (17.09.2024) இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மக்கள் சார்பில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்ததையடுத்தே ஜனாதிபதி தனது உத்தரவாதத்தை அளித்துள்ளார்.
அத்துடன், மன்னார் மற்றும் முல்லைதீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்ப்பதற்கும் ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் நகரப் பகுதியில் நேற்றையதினம் (17.09.2024) செவ்வாய்க்கிழமை பகல் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னாரில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கிறேன். மன்னாரில் பாரிய வளமுள்ளது. அதில் ஒன்று சூரிய சக்தி. அதை நாம் முழுமையாக பயன்படுத்துவோம். மன்னாரை சூரிய சக்தியின் மத்திய நிலையமாக மாற்றுவோம்.
தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசமாய் திரள்வோம்: யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் பகிரங்க அழைப்பு
சிலிண்டருக்கு வாக்களியுங்கள்
மன்னார் கடலில் இருந்து நல்ல காற்று வீசுகிறது. அதையும் பயன்படுத்துவோம். அந்த சக்தி இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது. இங்கு வாழும் தமிழ், சிங்கள முஸ்லிம் மக்கள் நன்கு வாழ வழி செய்வோம். மன்னாரில் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் எதுவித அச்சமுமின்றி வாழ முடியும். சிங்கள கிராமங்களில் 5 விகாரைகள் உள்ளன. அவற்றையும் நாம் பொறுப்பேற்போம்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம். மன்னாரை மேம்படுத்தி மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்போம். கமத் தொழிலை ஊக்குவிப்போம்.
இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும். 21ஆம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம்.
''சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்வதா அல்லது வரிசை யுகத்திற்குச் செல்வதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் எனது எதிர்காலமன்றி உங்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
செப்டெம்பர் 21 ஆம் திகதி மிக முக்கியமான நாளாகும். உங்கள் திருமண தினத்தின் பின்னர் முக்கியமான நாள் இது. இந்த நாடு நெருக்கடியில் இருந்தபோது சஜித்தோ அநுரவோ முன்வந்தார்களா? அவர்கள் எங்கிருந்தனர்? பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் பின்வாங்கினார்கள். இன்று நாட்டில் அனைத்தும் இருக்கின்றன.
பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்துள்ளது. மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் செய்கின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கஷ்டப்படும்போது வராமல் இப்போது தேர்தலுக்காக உங்களிடம் வந்திருக்கும் சஜித்தையும், அநுரவையும் தும்புத்தடியால் ஓட ஓட அடித்துத் துரத்த வேண்டும்.
வாயில் இருந்து உமிழ்நீர் வடிய வந்து தங்களுக்கு ஆணை தாருங்கள் என்று இருவரும் வெட்கமில்லாமல் கேட்கின்றார்கள். வரியைக் குறைப்பது ஐ.எம்.எப். நிபந்தனைக்கு முரணானது. சஜித்தும், அநுரவும் சொல்வதைப் போல தற்போதைய நிலையில் வரியைக் குறைத்தால் வருமானம் குறையும். நெருக்கடி ஏற்படும்.
இப்பகுதியில் மீன்பிடித்துறையை மேம்படுத்துவது குறித்து காதர் மஸ்தானுடன் கலந்துரையாடியுள்ளோம். அதனை நவீனமயப்படுத்துவோம். அவர் பெரிய கோரிக்கைப் பட்டியல் ஒன்றைத் தந்துள்ளார்.அவற்றை நிறைவேற்றுவதற்குத் தேவையான பணத்தை ஒதுக்குவேன்.
மேலும், இந்தப் பகுதியை சூரிய சக்தி மையமாக மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.
தெளிவான திட்டத்துடன் மக்களிடம் வந்திருக்கின்றேன். இந்தப் பிரதேசத்தில் உள்ள
தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து மக்களுக்கான வேலைத் திட்டத்தை நாங்கள்
நடைமுறைப்படுத்துகின்றோம் ” என்றும் கூறியுள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |