இலங்கை சிறையில் மனிதாபிமானம் அற்ற ரீதியில் நடத்தப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் : முன்வைக்கப்பட்ட விமர்சனம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் இராமேஸ்வரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதியன்று ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு கம்யூனிஸக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற செயல்
இதற்கிடையில், இலங்கையில் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு, அந்த நாட்டின் அதிகாரிகள் மொட்டை அடித்த நிகழ்வு என்பது இந்திய இறையாண்மைக்கே அவமதிப்பு என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எனவே மத்திய, மாநில அரசுகள் இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
குறித்த கடற்றொழிலாளர்களை, சிறைக் கழிவறைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்தும் இலங்கை அதிகாரிகள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
எனவே சிங்கள அரசின் இந்த மனிதத் தன்மையற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதின்று 8 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் இவர்களில் 5 பேரை அபராதத்துடன் விடுதலை செய்ய மன்னார் நீதிமன்றம் செப்டம்பர் 5ஆம் திகதியன்று உத்தரவிட்டது.
சிறைச்சாலை சுத்தம் செய்யும் பணிகள்
இதனையடுத்து தாம் அன்று இரவே வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மறுநாள் காலை தமது தலைகளை அதிகாரிகள் மொட்டை அடித்ததாக விடுவிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு தாம் எதிர்ப்பை வெளியிட்டபோதும், இது, தண்டனைக் கைதிகளுக்கு வழக்கமாக செய்யப்படும் செயற்பாடு என்று இலங்கை அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக தமிழக கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்களில், வழமையான கைதிகளை போன்று நடத்தப்பட்டதாகவும், இதன்படி சிறைச்சாலையை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இந்திய கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னதாக, இந்த சம்பவத்தை கண்டித்து கடந்த சனிக்கிழமையும் தங்கச்சிமடத்தில் விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களும், கடற்றொழில் சமூகத்தினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |