சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் நெருக்கடி உருவாகும் - உபுல் ரோஹன எச்சரிக்கை
சுகாதார சேவையின் முன்னணி பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை செலுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சகம் இன்னமும் எந்தவொரு பொதுவான அறிவித்தலையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் மருத்துவ தொழிற்சங்கமான அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உறுப்பினர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அமைச்சு முன்னுரிமை வழங்கியதாக வெளியான தகவல் நியாயமற்றது என்று சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி லக்குமார் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலை சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையையும் ,நெருக்கடியையும் உருவாக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் தடுப்பூசி திட்டத்தில் மேல்மாகாணத்தில் உள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உறுப்பினர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக நேற்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளன செயலாளர் உபுல் ரோஹன குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு குறித்த நிகழ்வின்போது தமது அதிகாரிகள் பணிகளை புறக்கணிக்கவுள்ளதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையிலேயே மருத்துவ நிபுணர்கள் சங்கமும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது .
இது தொடர்பில் விவாதிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தனவுடன்
சந்திப்பு ஒன்றை கோரியபோதும் இன்னும் அதற்கு பதில் வழங்கப்படவில்லை என்று
மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி லக்குமார் பெர்ணான்டோ
தெரிவித்துள்ளார்.