இலங்கையில் 31 வருடங்களின் பின்னர் சிக்கிய பெண் - வெளியான பரபரப்புத் தகவல்
31 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில், 64 வயதுடைய பெண் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக் கைது நடவடிக்கை நேற்று (8.10.2022) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரட்டை கொலை
1991 ஆம் ஆண்டு நாவின்ன மற்றும் பாணந்துறை பகுதியில் வசித்துவந்த தந்தை மற்றும் மகன் இருவரையும் கொலை செய்தமைக்காக பொலிஸாரினால் நீண்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ் விசாரணையின் படி பிரதான சந்தேகநபர் மேலும் சிலருடன் மதுபான விருந்து நடத்தியுள்ளதாகவும், அந்த விருந்தின் போது பாணந்துறை, பாப்புலர் மாவத்தை என்ற முகவரியில் வசித்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
பின்னர் சடலம் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பே போல்கொட ஆற்றுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் 47 வயதான தந்தையும், 21 வயதான மகனும் கொல்லப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
எனவே, விசாரணையின் படி இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த செப்டம்பர் 29 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை வாதுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மற்றொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அடுத்து, பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரான 64 வயதுடைய பெண்ணொருவரும் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபரின் மனைவியாவார்.
காணிப் பிரச்சினை
உயிரிழந்த நபருக்கு சொந்தமான மொரட்டுவை, மெண்டிஸ் மாவத்தையில் உள்ள 12 பேர்ச்சஸ் காணியை கையகப்படுத்துவதற்காகவே இந்தக் கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் இரண்டாவது மகனின் மனைவி பொலிஸ் மா அதிபரிடம் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைகளுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



