திரிபடைந்த கோவிட் வைரஸால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாமென எச்சரிக்கை
திரிபடைந்த புதிய கோவிட் வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே குறித்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித்த அளுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், திரிபடைந்த புதிய கோவிட் வைரஸ் தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை முன்னெடுப்பது அவசியமாகும்.
நாட்டில் தற்போதைய நிலையில் புதிய கோவிட் வைரஸ் தொற்றினால் ஏதேனும் அவதானம் மிக்க நிலைமை காணப்படுமாக இருந்தால் அது குறித்து ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்ககான யோசனைகளை தொற்றுநோய் தடுப்புபிரிவு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதனை மையமாக கொண்டு அதிகாரிகளுக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடியதாக இருக்கும். இதேவேளை புதிய வகை கோவிட் தொற்று குறித்து அதிக கவனம் செலுத்தப்படாத பட்சத்தில் எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும்.
தற்போதும் கூட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே, அதனுடாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.



