வவுனியாவில் ஊரடங்கு சட்ட நேரத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி திறக்கப்பட்ட 3 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 20ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் முழுமையான முடக்கம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் மீன் கடை ஒன்றும், மன்னார் வீதியில் பலசரக்கு கடை ஒன்றும், பேக்கரி ஒன்றும் முடக்க காலப்பகுதியில் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிஸாரால் எதிர்வரும் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அனுமதிப்பத்திரம் இன்றி வர்த்தக நிலையங்களை திறந்து வைத்திருந்தமைக்கு அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





