பெருந்தோட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்தும் மந்தகதி - தொழிலாளர் தேசிய சங்கம்
பெருந்தோட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்தும் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகத் தொழிலாளர் தேசிய சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அந்த சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஹட்டனில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பெருந்தோட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் குறைவடைந்துள்ளன. கோவிட் தொடர்பான விழிப்புணர்வும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது.
உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டாலும் அந்த பணிகளை பெருந்தோட்ட பகுதிகளில் அந்த நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதில்லை.
ஆகவே கோவிட் தடுப்பு பணிகளை பெருந்தோட்ட பகுதிகளிலும் அரசாங்கம் விரைவாக முன்னெடுப்பது அவசியம். அத்துடன் கிளங்கன் வைத்தியசாலையில் 14 சடலங்களை மாத்திரம் வைக்கும் நிலை உள்ளது.
இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நுவரெலியா மாவட்டத்தில் கோவிட் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய பெருந்தோட்ட மக்கள் பெருமளவு நிதியைச் செலவிடும் நிலையும் உள்ளது.
இதற்கும் அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுப்பது அவசியம். குறிப்பாக மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் இதில் கவனம் செலுத்துவது அவசியம். அதேபோல் கிளங்கன் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளும் தாமதமாகவே வெளியிடப்படுகின்றன.
இது குறித்தும் கவனம் செலுத்துவது அவசியம். ஆகவே பெருந்தோட்ட வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னெடுப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
இதன்போது 1000 ரூபா சம்பள விடயம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். '
ஒரு சில தோட்ட நிர்வாகங்களே தொழிற்சங்கங்களுக்கான சந்தாவை நிறுத்தியுள்ளன. ஒரு சில தோட்டங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்திற்குச் சந்தா பணத்தை அனுப்புமாறு தோட்ட தலைவர்கள் ஊடாக தொழிலாளர்கள் கோரியுள்ளனர். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளதால் இந்த சந்தா விடயத்தில் பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது.
சந்தா பணத்தின் மூலமே தொழிலாளர்களின் உரிமைச் சார்ந்த விடயங்கள் பேசப்படும்.
ஆகவே சந்தாவை அறவிட சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இல்லாததால் சந்தாவை அறவிட முடியாது என
சில கம்பனிகள் கூறியிருக்கின்றன. இதனை மையப்படுத்தி எதிர்காலத்தில்
நீதிமன்றத்தையும் நடவேண்டி ஏற்படலாம்.' என தெரிவித்துள்ளார்.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
