நாட்டிற்குள் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகளை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் முடிவு
புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டில் வைரஸ் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு நாளாந்தம் பி.சி.ஆர் சோதனைகளை குறைந்தது 15,000 ஆக அதிகரிக்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் தலைமையில் சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற சிறப்பு செயல்திறன் ஆய்வுக்குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவசர படுக்கைகளின் திறனை அதிகரிப்பது, கோவிட் நோயாளிகளுக்குத் தேவையான ஒக்ஸிசனை வழங்குதல், தரவு சேகரிப்பின் பொறிமுறையை வலுப்படுத்தல், சுகாதார ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கருவிகளை வழங்குதல் உட்பட்ட தீர்மானங்களும் இன்று மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பதற்கும்,
தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை
அமல்படுத்துவதற்கும், வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சிறப்பு
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை உருவாக்குவதற்கும் இன்றைய கூட்டத்தின்போது
முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.




