கோவிட் அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்
கோவிட் தொற்று இலங்கையில் கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தின் நிலையும் என்றும் இல்லாத வகையில் தொற்றாளர்கள் அதிகரிக்கும் மாவட்டமாக மாறி வருகின்றமையினால் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் சமுகப் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துச் செல்கின்றது. இது எமது மாவட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதனால் பொது மக்கள் சுகாதார வழிமுறைகளைச் சீராகப் பின்பற்றுவதுடன் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தரும் நோயாளர்களில் கணிசமானவர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் தற்போதைய கோவிட் விடுதி நோயாளர்களால் நிரம்பியுள்ள நிலையில், மேலும் ஓர் விடுதி கோவிட் தொற்றாளர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒட்சிசன் தேவையுடைய கோவிட் தொற்றாளர்கள் விகிதாசாரப்படி அதிகமாகக் காணப்படுவதனால் வைத்தியசாலையின் ஒட்சிசன் பாவனை அபரிவிதமாக அதிகரித்துள்ளது.
மேலும், சுகாதார பணியாளர்களும் கோவிட் தொற்றுக்கு உட்படும் நிலை ஏற்பட்டுள்ளமையினால் சுகாதார சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம்.
இவ்வாறான நிலைமைகளில், கோவிட் தொற்றாளர்கள் தவிர்ந்த ஏனைய நோயாளர்களின் சுகாதார தேவையை நிவர்த்திப்பதில் கடும் சிக்கல் நிலையைத் தோற்றுவிக்கும் வாய்ப்புள்ளது.
கோவிட் கடும் தொற்று காலத்தில், கோவிட் அல்லாத பிற நோயாளர்களுக்கான3 சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளமையால், மக்கள் கோவிட் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
சுகாதார வழிமுறைகளைச் சீராகப் பின்பற்றுவதுடன் ஏனையோருக்கு கோவிட் தொற்றை ஏற்படுத்தாத வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.




