வெளிநாடுகளின் மருத்துவ உதவியை ஏற்க மறுக்கும் வட கொரியா: கோவிட் தொற்று தீவிரம்
தற்போது வடகொரியாவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. போதியளவு கோவிட் பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தினால், கோவிட் நோய் தொற்று போன்ற ‘காய்ச்சலால்’ மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை மட்டுமே அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 2.19 லட்சம் பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாமை, மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோவிட் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திணறி வருகிறது.
இந்நிலையில் கோவிட் பரவலை எதிர்கொள்ள இஞ்சி, மூலிகை தேநீா் போன்ற பாரம்பரிய மருந்துகளை மக்கள் பருக வேண்டும் என அந்த நாட்டு அரச ஊடகம் பொதுமக்களிடம் பரிந்துரைத்து வருகிறது.
உலக நாடுகள் சில வடகொரியாவுக்கு உதவுவதாக கூறினாலும், வெளிநாடுகளின் மருத்துவ உதவியை ஏற்க மறுத்துவரும் வட கொரிய அரசு கோவிட் பரவலை எதிர்கொள்ள தற்போது பாரம்பரிய மருந்துகளை பரிந்துரைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



