இலங்கையில் கோவிட் - 19 மரணங்கள் சடுதியாக உயர்வு!
நாட்டில் கோவிட் - 19 மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் மேலும் ஐந்து கோவிட் - 19 மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது, இதன்படி இலங்கையில் மொத்த கோவிட் - 19 மரணங்களின் எண்ணிக்கை 489 ஆக உயர்வடைந்துள்ளது.
1. உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான பெண் ஒருவர், கண்டி பெரியாஸ்பத்திரியில் கடந்த பெப்ரவரி மாதம் 22ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா மற்றும் இரத்தம் விசமாகியமை காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர், கொதலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நிமோனியா மற்றும் உடல் உறுப்புக்கள் செயலிழப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த 2ம் திகதி உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய், இருதய மற்றும் கோவிட் - 19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் மார்ச் மாதம் 1ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் - 19 நோய்த் தொற்று மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
5. பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இரத்தம் விசமாகியதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, கோவிட் - 19 நிமோனியா, சிறுநீரக நோய் மற்றும் புற்று நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.