செயலமர்வொன்றில் கலந்துக்கொண்ட அரச உத்தியோகத்தர்கள் 22 பேருக்கு கோவிட் உறுதி
கிழக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இயற்கை நிலைபேறான விவசாயம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்ட 22 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் இயற்கை வேளாண்மை என்ற தலைப்பிலான 5 நாள் செயலமர்வு கடந்த 2 ம் திகதி மட்டக்களப்பு சர்வோதயா தொண்டர் நிறுவன மண்டபத்தில் விவசாய திணைக்கள கள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த செயலமர்வினை கிழக்கு மாகாண ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த செயலமர்வில் மாவட்டத்திலிருந்து பல்வேறு பட்ட பிரதேசங்களிலிருந்து 168 பேருக்கு தொடர்ந்து 5 நாட்களாகச் சிறிய மண்டபமொன்றில் இந்த செயலமர்வு 6 ம் திகதி வரை இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் கடைசி நாளான 6 ம் திகதி அங்கு சென்ற பொதுச் சுகாதார அதிகாரிகள் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
அதில் கலந்துகொண்ட பலர் வீடுகளுக்குச் சென்ற பின்னர் அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவர்கள் வைத்தியசாலையை நாடியபோது அவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி கண்டறியப்பட்டது.
அதேவேளை இந்த செயலமர்வில் கலந்து கொண்ட சுமார் 70 பேரை அவர்களது பிரதேசங்களில் உள்ள வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.







