கோவிட் உறுதிப்படுத்தப்பட்ட தாய் மற்றும் மகள் தப்பியோட்டம்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட தாய் ஒருவரும் அவரது மகளும் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
காய்ச்சல் மற்றும் தடிமன் காரணமாகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இன்று (09) வருகை தந்த 31 வயதுடைய தாய்க்கும் அவரது 10 வயதான மகளுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக வாட்டுக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு நோயாளர்கள் அனுமதிக்கும் அறைக்கு முன்னால் உள்ள கதிரையில் அமர்ந்திருந்துள்ளனர்.
சிற்றூழியர் ஒருவர் இவர்களை வாட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக நோயாளியைத் தேடியபோது தாயும், மகளும் வைத்தியசாலையை விட்டுத் தப்பியோடி உள்ளதாகத் தெரிய வருகின்றது.
குறித்த இருவரும் சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. குறித்து நோயாளிகள் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் வைத்தியசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
நோயாளர்கள் தமக்கு கோவிட் எனத் தெரிந்த போதிலும் இவ்வாறான செயற்பாடுகளில்
ஈடுபட்டு வருவதால் இன்னும் பலருக்குத் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு
வருவதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.



