மன்னார் மாவட்டத்தில் பொது மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்! - வைத்தியர் ரி.வினோதன்
மன்னார் மாவட்டத்தில் எதிர் வருகின்ற வாரம் முதல் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதை மன்னார் மாவட்டத்தில் எவ்வாறு வெற்றிகரமாகச் செயற்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசினால் அமுல்படுத்தப்படுகின்ற 'கோவிட்-19 ' தடுப்பூசி எதிர் வருகின்ற வாரம்முதல் மக்களுக்குச் செலுத்தப்பட உள்ளது.
இதில் 30 மற்றும் 60 வயதிற்கு இடைப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் அடுத்த வாரமே கோவிட்-19 தடுப்பூசி வழங்குவது தொடர்பான பொறிமுறைகள் ஆராயப்பட்டுள்ளன.
அதே நேரம் இது தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மேலும் நேற்று புதன் கிழமை (10) மன்னார் மாவட்டத்தில் 10 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றுகின்றனர்.
மேலும் ஒருவர் பாடசாலை ஆசிரியர் மேலும் 3 பேர் பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றுகின்றனர். ஒருவர் ஏற்கனவே கோவிட்-19 தொற்றாளராக இருந்தவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 217 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2021 ஆண்டு மொத்தமாக 200 பேர் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, பெப்ரவரி மாதம் மொத்தமாக 35 பேர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 694 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.



