ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட நீதியரசர் தொடர்பில் சபாநாயகரின் தீர்மானம்
உயர் நீதிமன்றத்திற்கு பதவி உயர்வுக்காக, ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட நீதியரசர் ஒருவரின் செயற்பாடுகள் குறித்து பிரதம நீதியரசரிடம் அறிக்கை கோரிய தமது முன்னைய தீர்மானத்தை முன்னெடுப்பதில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் இதனை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (08.12.2023) அறிவித்துள்ளார்.
முன்னதாக அரசியலமைப்பு பேரவையினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தின் செயற்பாட்டை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே இதனை அறிவித்தார்.
கடந்த நவம்பர் 14 ஆம் திகதி சபாநாயகர், பிரதம நீதியரசருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் சபாநாயகரும் அரசியலமைப்பு சபையும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காது என்றும் சட்டமா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
குற்றம் சுமத்திய மனுதாரர்
இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை சவால் செய்த விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றில் அறிவித்தார்.
பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களை பிரதிவாதிகளாகக் குறிப்பிடும் வகையில், சட்டத்தரணி சரித் பத்திரத்ன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் ஒருவர் தொடர்பான கேள்வித்தாளை அரசியலமைப்பு பேரவை, பிரதம நீதியரசரிடம் சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியலமைப்பு சபை, தலைமை நீதியரசரை நோக்கி அனுப்பிய கேள்வித்தாள், உண்மையில் முன்னோடியில்லாதது என்றும், முறையான நீதி நிர்வாகத்தின் செயல்பாட்டில் கடுமையான மீறல் என்றும், இதன் விளைவாக மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |