பெண்ணை அடைத்து வைத்து வன்புணர்வு-பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
பெண் ஒருவரை பலந்தமாக தடுத்து வைத்து, வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்கிய புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு தலா 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி .ஆதித்யா பட்டபெந்திகே தீர்ப்பளித்துள்ளார்.
ஏழு வருடங்களுக்கு முன்னர் செய்த குற்றம்
பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முறைப்பாட்டாளர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக தீர்மானித்த நீதிபதி, 07 வருடங்களுக்கு முன்னர் செய்த இந்த குற்றத்திற்காக தலா 15 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துள்ளார்.
புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களாக பணியாற்றிய எம். ஜயரத்ன மற்றும் எஸ்.விஜேசிங்க ஆகியோருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு, பெண் ஒருவரை பலவந்தமாக அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான நீண்ட விசாரணையின் போது, பிரதிவாதிகள் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதும் அவர்கள் ஒரு பெண்ணை பலவந்தமாக அடைத்து வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியமை குறித்து முறைப்பாடு கிடைத்ததாக வழக்கு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்த பின்னர், சட்டமா அதிபர் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
இது தொடர்பிலான நீண்ட விசாரணைக்குப் பின்னர், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால்,பிரதிவாதிகளுக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.



