யாழ். நகர் பகுதியில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு: சுகாதாரப் பிரிவு நடவடிக்கை
யாழ்ப்பாணம் - பிரதான நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு
உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளியின் அறிவுறுத்தலின் பிரகாரம், பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் நேற்றையதினம் (08.08.2023) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நகர் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும், யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கின.
உணவகங்களை மூடுமாறு கட்டளை
இரு உணவக உரிமையாளர்களிற்கும் எதிராக இன்று (09.08.2023) புதன்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான் உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு கட்டளை வழங்கிய நிலையில் வழக்கினை (18.10.2023) திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதனை தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகங்கள் இரண்டும் இன்று (09.08.2023) புதன்கிழமை சீல் வைத்து மூடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




