போக்குரத்து அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிரேஸ்ட அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பதவியில் சிரேஸ்ட இலங்கை நிர்வாக சேவை (SLAS) அதிகாரி ஒருவர் கடமைகளைப் பொறுப்பேற்பதைத் தடுத்ததன் மூலம், குறித்த அதிகாரியின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பில், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச சேவை ஆணைக்குழுவிற்கு (PSC) வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் தலையிட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் மூலம், மனுதாரரின் அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சுமார் 30 வருட கால சேவை அனுபவத்தைக் கொண்ட விசேட தர SLAS அதிகாரியான டபிள்யூ.எஸ். சத்யானந்த என்பவரே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் சத்யானந்த போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காகச் சென்றபோது, அந்தப் பதவிக்கு ஏற்கனவே வேறொரு அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளரிடமிருந்து அவருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
மனுவில் குறிப்பிட்டுள்ளபடி, சத்யானந்தா மீண்டும் அமைச்சிற்குச் சென்றபோது, அவரது சேவைகள் தேவைப்படவில்லை எனக் கூறி அவரை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் தற்காலிகமாக பொது நிர்வாக அமைச்சின் "அதிகாரிகள் குழுவிற்கு" (Officers Pool) திரும்ப வேண்டியிருந்ததுடன், பின்னரே அவருக்கு வேறொரு நியமனம் வழங்கப்பட்டது.
அரசு அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் என்பன அரச சேவை ஆணைக்குழுவின் (PSC) அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு உட்பட்டவையே தவிர, அமைச்சின் செயலாளர்களின் அதிகார வரம்பிற்குள் வருபவை அல்ல என நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த அதிகாரங்களில் தலையிட அல்லது அவற்றை தமதாக்கிக் கொள்ள முயலும் எந்தவொரு முயற்சியும் சட்டத்தின் ஆட்சியையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
செயலாளரின் இந்த நடவடிக்கை நிர்வாக நடைமுறையை மட்டுமன்றி, ஒரு பொது அதிகாரி என்ற ரீதியில் மனுதாரரின் கண்ணியத்தையும் பாதித்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த வழக்கில் மனுதாரருக்கு இழப்பீடு அல்லது வழக்குச் செலவுகளை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும், அதற்கான காரணமாக நீதிமன்றம் குறிப்பிட்ட விடயம் மிக முக்கியமானது.
மனுதாரர் எதிர்கொண்ட கண்ணிய இழப்பு, சங்கடம் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றை எந்தவொரு பணத்தினாலும் ஈடுசெய்துவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam