மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 18 இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவை இன்று (17.01.2024) மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
சட்ட விரோத கடற்றொழில்
இலங்கையின் தென் கடல் கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று (16) மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு றோலர் படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்ட தமிழக கடல் தொழிலாளர்கள் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்துள்ளனர்.
கைதான 18 கடற் தொழிலாளர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு றோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் 18 கடற் தொழிலாளர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அவர்களிடம் விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 18 இந்திய கடற்றொழிலாளர்களை எதிர் வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.