தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரின் புகைப்படம்! சீமானுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மேல் நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்திருந்த மனுவில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாக சுட்டிக்காட்டி வருகிறார்.
அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
ராஜீவ் காந்தி படுகொலை
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
எனினும், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பில் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார்.
எனவே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்கு தாக்கல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்துதல் தொடர்பான குறித்த வழக்கு சென்னை மேல் நீதிமன்றத்தில், நேற்று(19.07.2025) விசாரணைக்கு வந்துள்ளது.
குறித்த வழக்கானது இந்திய அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் தர வேண்டாமா? என நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய மனுதாரரின் கருத்தை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 21 மணி நேரம் முன்

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
