வரி ஏய்ப்பு விவகாரம்: மற்றுமொரு மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ரன்தெனிகல டிஸ்டில்லரீஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க உத்தரவிட்டுள்ளார்.
1.35 பில்லியன் ரூபாய் வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் நிறுவனத்தின் பணிப்பாளர்களான சரத் குமார விஜேவிக்ரம, புத்திக விஜேவிக்ரம மற்றும் மற்றுமொரு பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தாக்கல் செய்த வழக்கில், குறித்த நிறுவனம், 2012 மற்றும் 2015 க்கு இடையில் வருமான வரி, வெற் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியில் 1,358,773,144 ரூபாய்கள் செலுத்தவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒரு இயக்குனர் மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அத்துடன் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு வாரத்திற்குள் நிலுவைத் தொகையை செலுத்தத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உள்நாட்டு இறைவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் சார்பிலான சட்டத்தரணி தினேஸ் பெரேரா, வரி செலுத்தினால், நிறுவனம் குறித்த திணைக்களத்தின் நிலைப்பாட்டை அடுத்த விசாரணையின் போது முன்வைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |