குருந்தூர்மலை வழிபாட்டுக்கு தடை தொடர்பில் விளக்கம் கோரியுள்ள பொலிஸார்
நீதிமன்ற கட்டளையை மீறி முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
குறித்த வழக்கில் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு வழங்கப்படாத விடயமும் நீதவானின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 23 ஆம் திகதி விளக்கமளிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு முயற்சி
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு பொலிஸார் நிர்வாகத்தினர் மீது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டதாக வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த வழக்கு நகர்த்தல் பத்திரம் மூலம் இன்று விசாரணைக்கு கோரப்பட்டிருந்தது.
நகர்த்தல் பத்திரம் தாக்கல்
ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர்.
இதன்படி முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அந்த வகையில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும், கால்துறையினர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், வழக்கு தொடுனரான பொலிஸார் குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 23 ஆம் திகதி வழக்கு விசாணையை திகதியிட்டுள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)