அர்ச்சுனா எம்.பி வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று(29.01.2026) மல்லாகம் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இந்த முறைப்பாடு, வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராஜா தனகோபி, சிவரூபன் லகீந்தன் மற்றும் மனோகரன் பிரதீபன் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றம் சாட்டப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
