நட்சத்திர வீரருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொழும்பு பகுதியில் போலி ஆவணங்களைத் தயாரித்து காணிகளை விற்பனை செய்யும் மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாக டிலந்த உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இக்கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, குறித்த நபர்களை முதலில் இவ்வழக்கின் சந்தேகநபர்களாகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் அறிவுறுத்தினார்.

போலி ஆவணங்கள் மூலம் கொழும்பிலுள்ள காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி விற்பனை செய்யும் பாரிய மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் போது இவர்கள் வெளிநாடு சென்றால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் எனவும் கூறி இந்த பயணத்தடையைக் கோரப்பட்டது.
டிலந்த மாலகமுவவைத் தவிர சாந்த விதானகமகே, டெஸ்மண்ட் அமரசிங்க மற்றும் சமன் ஜெயவீர ஆகிய நால்வருக்கு எதிராகவே இப்பயணத்தடை கோரப்பட்டிருந்தது.
கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் இலக்கம் 18 இல் அமைந்துள்ள 43 பேர்ச் காணியொன்றை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து, பிரபல வாகன விற்பனை நிறுவனமொன்றிற்கு 1 பில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இக்காணியின் உண்மையான பெறுமதி 250 கோடி ரூபாய்க்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பன்னிபிட்டியவைச் சேர்ந்த 80 வயதான ஆரியபால திஸாநாயக்க என்ற நபர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காணி விற்பனை மூலம் கிடைத்த பணம் குறித்த நால்வரில் மூவருக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், டிலந்த மாலகமுவ என்பவருக்குப் பணத்திற்குப் பதிலாக 14 ஆடம்பர சொகுசு மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்ட மேலதிக நீதவான், விளக்கமறியலில் உள்ள ஆரியபால திஸாநாயக்கவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
மேலும், வெளிநாட்டு பயணத்தடை கோரப்பட்டுள்ள நபர்களை இச்சம்பவத்தின் சந்தேகநபர்களாகப் பெயரிட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri