கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரின் சட்டத்தரணிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்தினவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார பொதுநிதி துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னிலை செய்யப்பட்டபோது
அவரது சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்தின நீதிமன்றத்தில் முன்னிலையாகி வருகின்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்டபோது , நீண்ட காலமாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையை சுட்டிக் காட்டி மைத்திரி குணரத்தின தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறு கோரியுள்ளார்.

அதன்போது நீதிமன்றம் பிணை வழங்க மறுப்புத் தெரிவித்த நிலையில், மைத்திரி குணரத்ன, சற்று உரத்த தொனியில் நீதிமன்றத்தில் தன் வாதங்களை முன்வைத்துள்ளார்.
சிறைத் தண்டனை
அவரது தொனி கொழும்பு கோட்டை பிரதான நீதவானை மிரட்டும் வகையில் அமைந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த எழுத்துப்பூர்வமான அறிவிப்பை கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி, தனது செயலால் தொழில்முறை நெறிமுறைகளைப் பெருமளவில் மீறியுள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது சட்டத்தரணி அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்றும், அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.