வைத்தியர் சுகுணன் விவகாரம்! அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தடை
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கு, குறித்த வழக்கு முடிவடையும் வரை அவ்வாறான பதிவுகளை வெளியிட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற தடை
அத்துடன், குறித்த ஆறு பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதாரப் பணி உதவியாளர்களின் நியமனம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உடை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான மற்றும் தடைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகள் பதிவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வைத்தியர் கு. சுகுணன், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கும், சம்பந்தப்பட்ட யூடியூப் மற்றும் முகநூல் தளங்களுக்கும் எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 21ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு மீண்டும் விசாரணை
இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி நீதவான் அண்ணாதுரை தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்காளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் மற்றும் சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா ஆகியோர் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இதன்போது, நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக வழக்கு இன்று 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேரும், வழக்கு முடிவடையும் வரை வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
You may like this..