வடக்கு கல்வி அமைச்சில் முறைகேடுகள்: இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிகள் அதிகாரிகளுடன் காரசார விவாதம் (Photos)
வடக்கு கல்வி அமைச்சில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சு மூடி மறைப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வடமாகாண ஆளுநர் செயலகம் முன் நேற்றைய தினம் (15.12.2022) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கத்தினர் “வடக்கு ஆளுநரே ஊழல்வாதிகளை காப்பாற்றாதே”, “கல்வி அமைச்சில் வழங்கப்பட்ட போலி நியமனங்களை நிறுத்து”, “கையூடு பொக்கற்றில் வாக்குறுதிகள் காற்றில்” போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களை மட்டும் அலுவலகத்திற்கு பேசவருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
கலந்துரையாடலில் போது வட மாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்ற முறைகேடுகள் ஆதாரத்துடன் வழங்கப்பட்டிருந்த போதும் அதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஆளுநரின் செயலாளருக்கும் மாகாண கல்வி பணிப்பாளருக்கும் எடுத்துக் கூறினார்.
ஆசிரியர் இடமாற்றம், பாடசாலை அதிபர்கள் சுற்று நிருபங்களை பின்பற்றத விடயங்கள், நிர்வாக ஊழல் முறைகேடுகள், மாணவர்களுக்கு அதிபர்களினால் இடை விலகல் பத்திரம் கையளித்தல் உட்பட பல விடயங்களை உயர் அதிகாரிகள் முன்னிலையில் எடுத்துக் கூறியதுடன் கிளிநொச்சி வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கியமை, முல்லைத்தீவு துணுக்காய் வலயப் பாடசாலைகள் தொடர்பில் கலந்துரையாடலில் பங்கு பற்றிய ஆசிரியர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், துணுக்காய் வலயப் பாடசாலை ஒன்றில் தகுதியான அதிபர் பலகாலமாக நியமிக்கப்படாத நிலையில் அங்கு பல நிர்வாக பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இக்கருத்துக்களை கேட்டறிந்த மாகாண கல்வி பணிப்பாளர் சில விடயங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சில விடயங்களை மீண்டும் சரி பார்ப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.