கிரிக்கெட் நிர்வாக சபையில் மீண்டும் ஊழல்வாதிகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
கிரிக்கெட் நிர்வாக சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே புதிய குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்தக் குழுவுக்கே தற்போது நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமையால் மீண்டும் ஊழல்வாதிகள் இன்று முதல் பணியில் இணைந்துக் கொள்வார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்ததை அவர் இன்று(07.11.2023)நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் தடை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நேற்று நாம் கிரிக்கெட் நிர்வாக சபையை இடைநிறுத்தி, புதிய குழுவொன்றை சிறிது காலத்திற்கு நியமித்திருந்தோம்.
தற்போது இந்தக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 20இற்கு 20 போட்டித் தொடரில் நேர்ந்த, ஊழல் மோசடிகள் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளரினால் குறிப்பிடப்பட்டமைக்கு இணங்கவே, நாம் இந்தக் குழுவை நியமித்திருந்தோம்.
இந்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், கிரிக்கெட் நிர்வாகக் குழுவை மாற்ற வேண்டும் என கோரியமைக்கு இணங்கத்தான் நான், இந்த மாற்றங்களை செய்திருந்தேன்.
இந்த நிலையில், நாளைய தினம் நான் கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற அனைத்து ஊழல், மோசடிகள் தொடர்பாகவும் விசேட உரையாற்றவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.