கொரோனா பரவலை தடுக்க சுகாதார பிரிவினருடன் இணைந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கை
மஸ்கெலியா பகுதியிலுள்ள தோட்டங்களில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மஸ்கெலியா பிரதேச வைத்திய சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பொது சுகாதார உத்தியோகத்தர்கள், தோட்ட வைத்தியர்கள், மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி மானெலு தோட்டத்தில் ஆரம்பித்து மாக்கலை, கவரவெல, கிங்கொரா, சாமிமலை நகரம், ஸ்டர்ஸ்ப்பி, கொழும்பு தோட்டம், பெரிய, சிறிய சோலங்கந்த தோட்டங்கள், ஸ்டோக்கம் உள்ளிட்ட தோட்டங்களில் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என அனைத்து பிரிவினருக்கும் கையேடுகள் வழங்கி தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது சுகாதார வழிமுறைகளுக்கமைய ஒரு மீற்றர் இடைவெளி பேணுதல், கை கழுவுதல், தொற்று நீக்கம் செய்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி ஒலி பெருக்கிகள் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதில் பொது சுகாதார அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்கள் தோட்ட வைத்தியர்கள் உட்பட பலரும் இணைந்து கொண்டிருந்தனர்.



