ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர மற்றும் பெருங்குற்றச்செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு மாத்திரம் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும்,சாதாரண குற்றச்செயல்கள் குறித்த முறைபாடுகளை கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் விசேட பணியாற்றி விட்டு ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்திலுள்ள அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.