பிரித்தானியாவில் வேகமாக பரவும் கோவிட் தொற்று! - கட்டுப்பாடுகளை நீக்குவதில் மீண்டும் தாமதம்?
பிரித்தானியாவில் கோவிட் தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துதில் தாமதல் ஏற்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த 20ம் திகதி பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவிருந்தது. எனினும், அங்கு கோவிட் அச்சுறுத்தல் தலைதூக்கியதை அடுத்து எதிர்வரும் 19ம் திகதிக்கு அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் கோவிட் தொற்றின் நாளாந்த பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. அங்கு கடந்த 24 மணித்தியாலத்தில் 15,296 பேர் பாதிக்கப்பட்டதோடு 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மொத்தமாக 4,699,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 128,066 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 259,638 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 259 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,312,164 பேர் பூரண குணமடைந்துள்ளனர். தற்போது புதிதாக ஏற்படும் தொற்று பாதிப்பில் 95 சதவீதம் டெல்டா வகை மாறுபாடால் ஏற்படுகிறது என்று அந்நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவில் சுமார் இரண்டு மில்லியன் மக்களுக்கு நீண்டகால கோவிட் அறிகுறி இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அரை மில்லியன் பெரியவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தங்களுக்கு கோவிட் அறிகுறிகள் இருப்பதாக அறிக்கை செய்யும் மூன்றில் ஒரு பகுதியினர் குறைந்தது 12 வாரங்களுக்கு நீடிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
நீண்டகால விளைவுகளை நிர்வகிப்பது ஒரு பெரிய சவால் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.