மட்டக்களப்பில் தீவிரமடையும் கொரோனா தொற்று! வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டன
மட்டக்களப்பு நகரில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் 8 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிகை அதிகரித்து வருவதை தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இன்று காலை முதல் காந்திபூங்காவில் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் தலைமையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது 350 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 18 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்கள் கடமையாற்றிய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
நகரின் ஒரு பகுதியிலேயே இந்த அன்டிஜன் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்படும்போது இன்னும் பலர் இனங்காணப்படலாம் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு சென்றவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மாநகரினை தனிமைப்படுத்தி பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்புடன் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படும்.
சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத வர்த்தக நிலையங்களை மூடிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.








