முல்லைத்தீவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்! வர்த்தகர்கள் பலரிடம் பி.சி.ஆர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றுமுந்தினம் பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றை நடாத்தி வந்த குறித்த பெண் வவுனியாவில் உள்ள தன்னுடைய அண்ணாவின் வீட்டிற்கு சென்று வந்திருந்த நிலையில் வவுனியாவில் அண்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த நபருடைய அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் இருந்த கடையொன்றில் பணியாற்றுகின்ற கடைக்கு வருகை தந்து சென்றிருந்த இரண்டு பெண்களுக்கு நேற்றையதினம் கொரோனா தொற்றிருப்பது அடையாளம் காணப்பட்டு இருக்கின்றது.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பெண்களிடம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இருப்பினும் அரச, தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் வழமை போன்று இயங்கி வருகின்றன.